என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கோவில் விழா"
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த செஞ்சி பனம்பாக்கம் கிராமத்தில் உள்ள கோவிலில் கடந்த வாரம் ஜாத்திரை திருவிழா நடந்தது.
அப்போது கோவிலுக்கு வந்த பெண்களை செஞ்சி பனம்பாக்கம் காலனி பகுதியை சேர்ந்த பாலகுமார், நாகராஜ், அப்பாஸ், கார்த்திக் ஆகியோர் கிண்டல் செய்தனர்.
இது தொடர்பாக செஞ்சி பனம்பாக்கத்தை சேர்ந்த குணசேகரன் கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த செஞ்சி பனம்பாக்கம் காலனியை சேர்ந்த சிலர் நேற்று செஞ்சி பனம்பாக்கம் கிராமத்துக்குள் புகுந்து மோதலில் ஈடுபட்டனர்.
திடீரென்று அவர்கள் அங்கிருந்த 4 வீடுகளை அடித்து நொறுக்கினார்கள். அப்போது செந்தில், சரவணன், அம்சம்மா, மாரி ஆகியோர் தடுக்க முயன்றனர்.
அப்போது அவர்கள் தாக்கப்பட்டார்கள். படுகாயம் அடைந்த 4 பேரும் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் கள்.
இது தொடர்பாக கடம்பத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆத்தூர்:
திண்டுக்கல் அருகே சித்தையன்கோட்டை அழகர்நாயக்கன்பட்டியில் காளியம்மன், பகவதியம்மன், முத்தாலம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது.
இதில் சாமி ஊர்வலம் நடைபெற்றபோது ஏராளமான வாலிபர்கள் கூட்டத்தில் ஆடிப்பாடி சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவர் தவறுதலாக சபரி என்ற வாலிபர் மீது மோதி விட்டார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் 2 பேரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
ஆனால் சபரி கடும் கோபத்தில் இருந்ததால், கணேஷ் வீட்டுக்கு சென்று அவரை கடுமையாக தாக்கி உள்ளார்.
இது குறித்து செம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சபரியை கைது செய்தனர்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் மாற்றபுரத்தில் உள்ள பகவதி கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவையொட்டி நேற்று மாலை செண்டை மேளம் முழங்க யானைகள் ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தில் திருவம்பாடி குட்டி சங்கரன் யானை உள்பட 21 யானைகள் கலந்து கொண்டன.
நேற்று மாலை 5 மணியளவில் 21 யானைகளும் அணிவகுத்து சென்றது. குட்டி சங்கரன் யானையை பாகன் பாபுராஜ் (வயது 39) என்பவர் வழிநடத்தி சென்றார். மற்றொரு பாகன் சினீஸ் (34) என்பவர் யானையின் மேல் அமர்ந்து சென்றார். கோவில் அருகே ஊர்வலம் சென்ற போது திடீரென குட்டி சங்கரன் யானைக்கு மதம் பிடித்தது.
இதனை பார்த்த அங்கு இருந்த பக்தர்கள் நாலாபுறமும் சிதறியடித்து ஓடினர்.
இதனை பார்த்த பாகன் பாபுராஜ் மதம்பிடித்த குட்டி சங்கரன் யானையை அடக்க முயன்றார். அப்போது யானை பாகனை துதிக்கையால் சுற்றி வளைத்து தூக்கி வீசியது. பின்னர் தனது கொம்பால் குத்திக் கொன்றது. இதில் சம்பவஇடத்திலேயே பாபுராஜ் பரிதாபமாக இறந்தார்.
யானையின் மேல் அமர்ந்து சென்ற மற்றொரு பாகன் சினீஸ் உயிரை காப்பாற்றிக்கொள்ள யானையின் மேல் இருந்து குதித்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு திருச்சூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த தகவல் கிடைத்ததும் யானை பாதுகாப்பு குழுவினர் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் யானைக்கு மயக்க ஊசி செலுத்தனர். 5 மணிநேரம் போராட்டத்துக்கு பின்னர் யானையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி எம்.ஜி.ஆர். நகரில் தண்டு மாரியம்மன் கோவில் என்று அழைக்கப்படும் திரவுபதி அம்மன் சமேத தருமராஜா கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவையொட்டி, இன்று காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.
இதைத்தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அப்போது ஆண், பெண் பக்தர்கள் ஒரே வரிசையில் அன்னதானம் வாங்குவதற்காக நின்றனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி, மூதாட்டி ஒருவரின் கழுத்தில் இருந்த 3 பவுன் செயினை மர்மநபர் பறித்துக் கொண்டு நைசாக தப்பி ஓடி விட்டான்.
நகையை பறிகொடுத்த மூதாட்டி கத்தி கூச்சலிட்டார். அங்கிருந்தவர்கள் சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பிறகு இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
நகை பறித்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த லளிகம் ஊராட்சியில் உள்ள ராஜவீதியில் ஒரு தரப்பினருக்கு சொந்தமான எருக்கம்மாள்-சக்கரம்மாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு முன்பு மற்றொரு தரப்பை சேர்ந்த பெண் ஒருவருக்கு சொந்தமான வீட்டுமனை நிலம் 3 சென்ட் உள்ளது. தற்போது இந்த கோவிலின் திருவிழா வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ளதால், கோவிலுக்கு முன்புறம் உள்ள நிலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி கோவில் திருவிழா கொண்டாட வழிவகை செய்யவேண்டும் என நல்லம்பள்ளி தாசில்தார் மற்றும் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு கோவில் தரப்பினர் மனு அளிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக வருவாய்த் துறையினர் கோவிலுக்கு முன்புறம் உள்ள வீட்டுமனை நில ஆக்கிரமிப்புகளை நேற்று அகற்றுவதாக வந்த தகவலை தொடர்ந்து, கோவிலுக்கு முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்தில் ஒரு தரப்பினர் திரண்டதால் திடீர் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.
இதுகுறித்து ஒருதரப்பினர் கூறியதாவது:- இந்த கோவிலுக்கு முன்புள்ள வீட்டுமனை நிலம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருந்து வருகிறது. நீதிமன்ற உத்தரவு எங்களுக்கு ஏதும் கிடைக்கவில்லை. ஆக்கிரமிப்பு அகற்றம் செய்வதாக வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் யாரும் எங்களிடம் பேச்சு வார்த்தைகூட நடத்தவில்லை.
இதற்கிடையில் போலீசார் குவிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்துவதோடு, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாக இருக்கிறது. இத்தகைய செயல் இரு சமூகத்தினரிடையே மோதலை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. நீதிமன்ற உத்தரவுப்படி எந்த தீர்ப்பு வந்தாலும், அந்த தீர்ப்புப்படி வருவாய்த் துறையினர் தங்களது செயல்பாடுகளை செய்யவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மற்றொரு தரப்பினர் கூறும்போது, 20 ஆண்டுகளுக்கு பிறகு 16 கிராமங்களை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து, எருக்கம்மாள்-சக்கரம்மாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி, தலைமீது தேங்காய் உடைத்து சாமிக்கு நேர்த்திகடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் முன்பு கூடுவதால், கோவிலுக்கு முன்புற ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மட்டுமே கோவில் திருவிழாவை சிறப்பாக நடத்த முடியும். இல்லாவிடில் சாமி திருவீதி உலா நடத்த முடியாமல் போய்விடும். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி திருவிழா நடத்த உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் மதியம் 1 மணியளவில் கோவில் முன்பு கூடியிருந்தனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினரும் அங்கு ஒன்று கூடியதால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. இதனால் வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்புகள் அகற்றவில்லை. போலீசாரும் கண்காணிப்பில் மட்டுமே ஏற்பட்டனர்.
ஒரு தரப்பை சேர்ந்தவர்களும் கலையாமல் இருந்து வந்ததால், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதை தவிர்க்கும் வகையில் வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்பு மேற்கொள்ளாமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
இதையடுத்து சுமார் 3 நேரத்திற்கு மேலாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும் அங்கிருந்து சென்றனர். இருந்தாலும் தொடர்ந்து போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை:
மதுரை மாவட்டம், சோழவந்தான் டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் பாண்டிமாரி. இவரது மகன் முத்துப்பாண்டி (வயது 25). ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார்.
விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த முத்துப்பாண்டி சோழவந்தான் மாரியம்மன் கோவில் விழாவில் குடும்பத்துடன் அக்னி சட்டி எடுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
சோழவந்தான் காரைக்கடை தெருவில் அக்னிசட்டி ஊர்வலத்தில் சென்றபோது சிலர் முத்துப்பாண்டியிடம் தகராறு செய்துள்ளனர். இதில் முத்தப்பாண்டிக்கு உருட்டுக்கட்டை அடி விழுந்தது.
தலை, கை உள்ளிட்ட இடங்களில் பலத்த ரத்தக் காயம் ஏற்பட்ட முத்துப் பாண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துப்பாண்டியை தாக்கிய மாரிக்கனி (20), ராம்குமார், மதி, தினேஷ், பிரபாகரன், அங்குச்சாமி, ஆலயமணி, கார்த்தி ஆகிய 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேனி, மே. 29-
தேனி அருகே கோவில் விழாவில் வீசிய விபூதியால் 300 பேருக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது.
தேனி அருகே உள்ள கொடுவிலார்பட்டியில் கடந்த 5 நாட்களாக சவுடாம்பிகை அம்மன் கோவில் திருவிழா நடந்து வந்தது. விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக நேற்று இரவு கத்தி போடும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக நேர்த்திக்கடன் வைத்திருந்த பக்தர்கள் தங்கள் உடலில் கத்தி போட்டவாறு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர்.
கத்தி போடும் சமயங்களில் உடலில் அதிக அளவு ரத்தம் வெளியேறாமல் தடுக்க அவர்கள் மீது விபூதி வீசுவது வழக்கம். அதன்படி திருவிழாவில் கத்தி போட்டு ஆடி வந்த பக்தர்கள் மீது விபூதி வீசப்பட்டது.
இரவு திருவிழா முடிந்ததும் பக்தர்கள் வீட்டுக்கு சென்று விட்டனர். அதன் பிறகு அவர்களுக்கு லேசான கண் எரிச்சல் ஏற்பட்டது. நேரம் செல்ல செல்ல கண்கள் வீங்கி எரிச்சல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதனால் இன்று காலை முதல் தேனியில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் 300-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் குவிந்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் கண் எரிச்சல் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அவர்களுக்கு முதல் கட்டமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் திருவிழாவின் போது பக்தர்கள் மீது வீசிய விபூதியில் ரசாயனக் கலவை கலந்ததால் இது போன்று நடந்திருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர். அந்த விபூதியை ஆய்வுக்கு அனுப்பி சோதனை நடத்தவும் போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
திருவிழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் கண் எரிச்சல் மற்றும் வீக்கம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் குவிந்ததால் தேனியில் பரபரப்பு ஏற்பட்டது. #Tamilnews
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள முப்புலிவெட்டி சந்தனமாரியம்மன், உச்சினிமாகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு 18-வது ஆண்டு மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது. போட்டிக்கு ஊர் தலைவர் ஜோசி தலைமை தாங்கினார். போட்டியில் தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் உட்பட பல மாவட்டங்களில் இருந்து 40 அணிகள் கலந்து கொண்டனர்.
இறுதி போட்டியில் முப்புலிவெட்டி ஜெயசேகர் அணியும் தூத்துக்குடி ஏ.கே பிரதர்ஸ் அணியும் மோதின. இறுதி போட்டியை தூத்துக்குடி கேபிள் டி.வி தாசில்தார் செல்வக்குமார் தொடங்கி வைத்தார். இதில் முப்புலிவெட்டி ஜெயசேகர் அணி வெற்றி பெற்றது. இந்த அணிக்கு ரூ.26 ஆயிரம் மற்றும் வெற்றி கோப்பை வழங்கப்பட்டது.
2-வது பரிசு பெற்ற தூத்துக்குடி ஏ.கே பிரதர்ஸ் அணிக்கு ரூ.21 ஆயிரம் மற்றும் வெற்றி கோப்பை வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற அணிகளுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளையராஜா, சிலோன் காலனி தில்லைநாயகம், முப்புலி வெட்டி சங்கரநாராயணன், தூத்துக்குடி கேபிள் டி.வி தாசில்தார் செல்வக்குமார் மற்றும் பலர் பரிசு மற்றும் வெற்றி கோப்பை வழங்கினார்.
காரைக்குடி அருகே உள்ள கோவிலூர் மேலத் தெருவைச் சேர்ந்தவர் சின்னையா (வயது 60). கூலித்தொழிலாளி. இவரது மகன் சுப்பையா (35).
நேற்று அந்தப்பகுதியில் பாட்டையா முனியசாமி கோவில் திருவிழா நடந்தது. திருவிழா ஊர்வலத்தின் போது இளைஞர்கள் சிலர் மது அருந்தி ஆட்டம் போட்டுச் சென்றனர். அவர்களை சுப்பையா கண்டித்தார்.
இதனைத் தொடர்ந்து அங்கு நின்ற மற்றவர்களும், இளைஞர்களை சத்தம் போட்டனர். இதனால் அந்த இளைஞர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.
அதன் பிறகு இரவு 9 மணியளவில் 5 இளைஞர்கள் சுப்பையா வீட்டுக்கு வந்தனர். அவர்கள் கதவை தட்டியதும், சின்னையா கதவை திறந்தார்.
அவரிடம், ‘உனது மகனை வெளியே அனுப்பு, அவனை அடிக்காமல் விட மாட்டோம்’ என வாக்குவாதம் செய்தனர். ‘மகன் இங்கு இல்லை’ என சின்னையா கூறியபோதும் ‘வீட்டு முன்பு மோட்டார் சைக்கிள் நிற்கிறது. எனவே அவன் உள்ளே தான் இருப்பான், அவனை கொலை செய்வோம்’ என இளைஞர்கள் கூறினர். இதனால் ஆத்திரம் அடைந்த சின்னையா அவர்களிடம் வாக்குவாதம் செய்தார்.
அப்போது வீட்டு முன்பு கிடந்த இரும்பு பலகையை எடுத்து சின்னையாவை, இளைஞர்கள் தாக்கினர். இதில் அவர் தலையில் பலத்த காயம் அடைந்தார். அக்கம், பக்கத்தினர் சின்னையாவை மீட்டு காரைக்குடி மற்றும் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பிறகு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை சின்னையா பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து குன்றக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆத்மநாதன் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
வழக்கு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த நாச்சியப்பன் மகன்கள் ராஜா (19), ராஜேஷ் (18), ரவிச்சந்திரன் மகன் பாண்டியராஜன் (18), முத்து மகன் பாலசுப்பிரமணியன், மாரியப்பன் மகன் பழனிக்குமார் ஆகிய 5 பேரை போலீசார் தேடி வந்தனர்.
இதில் ராஜா, ராஜேஷ், பாண்டியராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மற்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்